கால நிலைக்கேற்ற வகையில் உணவையும், உடைகளையும் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது, அந்தந்த நேரங்களில் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும். அந்த வகையில் தற்போது கோடைக் காலத்திற்கு ஏற்ற உணவு வகைகளைப் பார்க்கலாம்.
வெயில் வாட்டும் நேரத்தில் சாதாரண தண்ணீருக்குப் பதிலாக, புதிதாகத் துண்டு போடப்பட்ட, சாறு நிறைந்த தர்ப்பூசணியை சாப்பிடலாம். தண்ணீர்ச் சத்து நிறைந்த, கலோரி குறைந்த தர்ப்பூசணி, வெயில் காலத்தைச் சமாளிக்க ஏற்ற ஒன்று. தர்ப்பூசணி சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்களை கொண்டுள்ளது. உடம்பில் நச்சுக்களின் தீமையை எதிர்க்கக் கூடியவை இவை.
சீரகம் குளிர்ச்சி தரக் கூடியது. சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய நீரைக் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை உட்கொள்வது நமது உடல் சமநிலையை மிகவும் மேம்படுத்தும். எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, அதிக திரவ உணவுகளை உட்கொள்வது கோடையின் தீமைகளில் இருந்தும் நம்மைக் காத்துக்கொள்ளும் வழியாகும்.
வெள்ளரிப்பழமானது குளிர்ச்சியானது, நீர்ச்சத்துமிக்கது என்பதைக் காட்டிவிடுகிறது. வியர்வை போன்றவற்றின் மூலம் உடம்பிலிருந்து அதிகமாகத் தண்ணீர் வெளியேறும்போது உடம்பில் தாது உப்புகளின் சமநிலையைக் காக்க வெள்ளரி உதவுகிறது.